சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி கன்னியாகுமரியில் மலர் கண்காட்சி


சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி கன்னியாகுமரியில் மலர் கண்காட்சி
x
தினத்தந்தி 24 Oct 2019 11:00 PM GMT (Updated: 24 Oct 2019 7:49 PM GMT)

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி வருகிற டிசம்பர் மாதம் ஊட்டியை போன்று மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அசோக் மேக்ரின் கூறினார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் நாகர்கோவில் மெயின்ரோட்டில் 31.64 ஏக்கர் நிலப்பரப்பில் திருவிதாங்கூர் மன்னரால் 1922-ல் அரசு பழப்பண்ணை தொடங்கப்பட்டது. இந்த அரசு பழத்தோட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.4 கோடி செலவில் 15 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் அலங்கார நீரூற்று, மூங்கில் பாலம், அலங்கார புல்வெளி உள்ளிட்டவை அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பூங்காவை மேலும் மேம்படுத்தி சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் செலவில் வீரசாகச பூங்கா (அட்வெஞ்சர் பார்க்) அமைக்கப்பட உள்ளது.

இந்த பூங்காஅமைக்கப்படும் இடத்தை குமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணைஇயக்குனர் அசோக் மேக்ரின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மலர் கண்காட்சி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரியில் உள்ள அரசு பழத்தோட்டத்தில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஊட்டியை போன்று மலர் கண்காட்சி நடத்தப்படும். இதில் ஊட்டி ரோஸ் உட்பட ஏராளமான மலர் வகைகள் இடம்பெறும்.

வீரசாகச பூங்காவில் விதவிதமான விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தும் விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உதவிடும் பொருட்டு விளையாட்டு கருவிகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அகஸ்தீஸ்வரம் வட்டார தோட்டகலைதுறை உதவி இயக்குனர் ஷீலாஜாண், தோட்டக்கலை (நடவுபிரிவு) உதவி இயக்குனர் விமலா, திருப்பதிசாரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் கவிதா, குமரி அரசு தோட்டக்கலை பண்ணை அலுவலர் சந்திரலேகா, உதவி அலுவலர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story