லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் நடப்பதில்லை - முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு
புதுவையில் லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் நடப்பதில்லை என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. இணை செயலாளருமான ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் சி.பி.ஐ. கிளையை அமைப்பதற்கு கவர்னர் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. பொதுவாழ்க்கையில் துய்மையான பணிகளை ஆற்றி வருபவர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்பார்கள். இங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே சி.பி.ஐ. கிளை தொடங்கியிருக்கவேண்டும்.
சமூக, கலாசார, பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்கள்தான் சி.பி.ஐ. பற்றியோ, அமலாக்கத்துறை பற்றியோ, வருமான வரித்துறை பற்றியோ கவலை கொள்ளவேண்டும். இது ஆளுங்கட்சிக்கோ, எதிர்க்கட்சிக்கோ, பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ எதிரான அமைப்பு அல்ல. எனவே ஆளுங்கட்சியை மிரட்டுவதற்கும், பயப்படுத்துவதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்குகிறார்கள் என்ற கூற்று முற்றிலும் தவறானது.
காவல்துறை சரியாக செயல்படாததால்தான் சி.பி.ஐ. கிளை அமைக்கப்படுகிறது என்ற வாதமும் அடிப்படையற்றது. காவல்துறையின் பணிகளை வலுப்படுத்தும் அமைப்பாகத்ததான் சி.பி.ஐ.யை கருதவேண்டும். புதுவை யூனியன் பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் கிரிமினல் மற்றும் பொருளாதார குற்றங்கள் பெருகி வருகிறது என்பது உண்மை.
பொதுவாழ்க்கையில் உள்ள சிலர் அரசியலை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தி பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு கற்பனைக்கு எட்டாத அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதாக மக்கள் சொல்கின்றனர். அரசுத்துறைகளில் 50 சதவீதமான அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் நடப்பதில்லை. இந்த குற்றங்களை தடுப்பதற்காவும், குறைப்பதற்காகவும்தான் புதுவைக்கு சி.பி.ஐ. கிளை தேவைப்படுகிறது. அதேநேரத்தில் சி.பி.ஐ. நீதிமன்ற கிளையையோ, ஐகோர்ட்டு கிளையையோ புதுச்சேரியில் அமைக்கவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story