அரக்கோணத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம்


அரக்கோணத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2019 4:15 AM IST (Updated: 25 Oct 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம், 

அரக்கோணம் நகரத்தில் ரூ.94 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. கழிவுநீர் தொட்டிகள், குழாய்கள் அமைக்கும் பணி, வீட்டின் இணைப்பை கழிவுநீர் தொட்டியுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

பணிகள் முடிந்த தெருக்களில் சிமெண்டு சாலை, தார் சாலைகள் நகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது. தற்போது அரக்கோணத்தில் மழை பெய்து வருவதால் சீரமைக்கப்படாத சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து எழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.

அரக்கோணம் இந்திராகாந்தி சிலையில் இருந்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வழியாக காவனூர் செல்லும் சாலையில் தினமும் தனியார் பள்ளிகளுக்கும், சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளது.

வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை விட்டு செல்லும் பெற்றோர்கள் சேற்றில் விழுந்து சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரக்கோணம்- திருத்தணி சாலையில் நகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரக்கோணம்-திருத்தணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.

ஆனால் பொதுமக்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து திடீரென கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் தடியடி நடத்தியவுடன் சாலையில் இருந்தவர்கள் கலைந்து சிதறி ஓடினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story