சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி லாரி-பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி லாரி-பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2019 10:30 PM GMT (Updated: 25 Oct 2019 6:59 PM GMT)

கோட்டூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி லாரி- பொக்லின் எந்திரத்தை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர், 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து பைங்காட்டூர், வாலிஓடை, கடைத்தெரு, மேலபுத்தூர், அக்கரைகோட்டகம், நல்லூர், ஒரத்தூர் வழியாக முத்துப்பேட்டை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஒரத்தூர் பாலத்தில் இருந்து கடைத்தெரு கிராமம் வரை மிக மோசமாக பழுதடைந்துள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. மழை காலங்களில் சாலையில் சேறும், சகதியுமாக காணப்படுவதால் போக்குவரத்து துண்டிக்கப்படும்.

இதுகுறித்து பொதுமக்கள் பல ஆண்டுகளாக அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரையாற்றில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த லாரியையும், மணல் அள்ள பயன்படுத்திய பொக்லின் எந்திரத்தையும் ஒரத்தூர் காளியம்மன் கோவில் அருகில் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்களார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாவட்ட அதிகாரிகள் இங்கு வந்து சாலையை பார்வையிட்டு உத்தரவாதம் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து மன்னார்குடி தாசில்தார் கார்த்தி, திருத்துறைப்பூண்டி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story