திண்டுக்கல் உள்பட 7 ஊர்களுக்கு குடிநீர் வழங்கும் காமராஜர் அணை நீர்மட்டம் 10 அடியாக உயர்வு


திண்டுக்கல் உள்பட 7 ஊர்களுக்கு குடிநீர் வழங்கும் காமராஜர் அணை நீர்மட்டம் 10 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 25 Oct 2019 10:30 PM GMT (Updated: 25 Oct 2019 7:20 PM GMT)

திண்டுக்கல் உள்பட 7 ஊர்களுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்ந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் காமராஜர் அணை உள்ளது. இந்த அணை மொத்தம் 23.6 அடி உயரம் கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கூழையாறு, குடகனாறு ஆகிய 2 ஆறுகளின் தண்ணீர், காமராஜர் அணைக்கு வருகிறது. சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு, குடிநீர் பயன்பாட்டுக்காக காமராஜர் அணை கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணையில் இருந்து திண்டுக்கல், சின்னாளப்பட்டி, ஆத்தூர், பள்ளபட்டி, பித்தளைபட்டி, பிள்ளையார்நத்தம், வக்கம்பட்டி ஆகிய 7 ஊர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் அணை முற்றிலும் வறண்டு போனது. இதையடுத்து அணையை ஒட்டி உள்ள உறைகிணறுகளில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்தது. அதிலும் காமராஜர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதைத் தொடர்ந்து கூழையாறு மற்றும் குடகனாற்றில் தண்ணீர் வரத்தொடங்கியது. இதன் காரணமாக அணையின் நீட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி காமராஜர் அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்ந்தது. அணைக்கு சுமார் 10 கனஅடி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையின் போது மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவ்வாறு மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் மேலும் சில அடிகள் உயர வாய்ப்பு உள்ளது.

Next Story