பா.ஜ.க.வுடன், த.மா.கா. இணைப்பா? - ஜி.கே.வாசன் பேட்டி


பா.ஜ.க.வுடன், த.மா.கா. இணைப்பா? - ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 26 Oct 2019 4:45 AM IST (Updated: 26 Oct 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வுடன், த.மா.கா. இணைப்பா? என்பது குறித்து ஜி.கே.வாசன் பதில் அளித்துள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கும்பகோணம், 

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு இந்த வெற்றியின் மூலம் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகளின் தவறான பொய் பிரச்சாரங்கள் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற செய்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் பெற்று சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி வாய்பை இழந்தது. தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்கள் ஒருசில நாட்களில் மனமாற்றம் அடைந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு அதிக ஆதரவு அளித்துள்ளனர். இந்த மாறுதல் மேலும் அதிகரித்து வரும் காலங்களில் அ.தி.மு.க. கூட்டணி அதிக வெற்றியை பெறும்.

தி.மு.க. வழக்கு தொடர்ந்ததால் தான் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முழு காரணம் தி.மு.க. தான். தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 வார காலம் தமிழக அரசு அவகாசம் கேட்டிருப்பது நியாயமானது. உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என அ.தி.மு.க. அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. ஓரிரு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்த இந்த கூட்டணி வெற்றிக்காக பாடுபடும்.

5 முறை ஆண்ட பா.ஜனதா, மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் கூட்டணி அடிப் படையில் வெற்றி பெற்றுள்ளது. 5 முறை எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், ஆளும் கட்சியினரை பற்றி தொடர் குற்றச்சாட்டுகள் வைத்தும் மத்தியிலும், மாநிலத்திலும் வெல்ல முடியவில்லை. இதனை அவர்கள் ஜனநாயகப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரியானா மாநிலத்தை பொறுத்தவரையில் ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடைக்கவில்லை. எனினும் மக்கள் ஆளும் கட்சியினருக்கு அதிகப்படியான வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வதால் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை, நம்பிக்கையை இழக்க நேரிட்டது. இதை கல்வித்துறையும், மருத்துவத்துறையும் 100 சதவீதம் ஊழல் இல்லாமல் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

த.மா.கா சார்பில் அடுத்த மாதம்(நவம்பர்) சென்னை, திருச்சியில் உள்ளாட்சி தேர்தல் பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படும். இதன் மூலம் வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்து விவாதித்து அந்த இடங்களை கூட்டணியில் பெற்று போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இன்சூரன்ஸ் துறையில் ஆயுட்கால பிரிமியம் ஜி.எஸ்.டி. விதிப்பை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த வேண்டும்.

கூட்டணி கட்சியினர் என்ற அடிப்படையில் பா.ஜனதாவினர் விடுத்த அழைப்பை ஏற்று தஞ்சையில் கடந்த மாதம் பா.ஜனதா சார்பில் நடந்த காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் த.மா.கா. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சமீப காலமாக பா.ஜனதாவோடு த.மா.கா. இணையபோவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே.

பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், விவசாயிகளிடம் நேரடியாக வழங்க வேண்டும். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கும் அறிவிப்பை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story