குமரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்


குமரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2019 3:30 AM IST (Updated: 26 Oct 2019 8:08 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

நாகர்கோவில்,

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர் பணியிடங்களை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும், பட்டமேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மேலும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களுக்கு பதிலாக பயிற்சி டாக்டர்கள், பட்டமேற்படிப்பு பயிலும் அரசு டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேபோல் மற்ற அரசு ஆஸ்பத்திரியிலும் பெரும்பாலான டாக்டர்கள் பணிக்கு வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணிகள் பாதிப்பு இல்லை

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் கூறுகையில் “கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மொத்தம் 171 டாக்டர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 71 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை. 100 பேர் பணிக்கு வந்தனர். பட்டமேற்படிப்பு டாக்டர்கள் 26 பேரில் 21 பேர் வந்தனர். 5 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை. புறநோயாளிகள் பிரிவு வழக்கம் போல் செயல்பட்டது. நேற்று மட்டும் 676 பேருக்கு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 15 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருந்தோம். 10 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். 5 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லாததால் அவர்களுக்கு செய்யப்படவில்லை. எனவே மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் முதல் நாளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை“ என்றார்.

குமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் (பொறுப்பு) செந்தில்குமார் கூறுகையில், குமரி மாவட்டத்தில் மொத்தம் 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றில் மொத்தம் 139 டாக்டர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவரும் நேற்று பணிக்கு வந்திருந்தனர். இதனால் யாரும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றார்.

போராட்டம் தொடர்ந்தால்...

குமரி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ஜான்பிரிட்டோ கூறுகையில், குமரி மாவட்டத்தில் மொத்தம் 9 அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளன. அவற்றில் 95 டாக்டர்கள் பணியாற்றுகிறார்கள். நேற்று 12 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. மற்ற அனைவரும் பணிக்கு வந்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தொடர்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார். போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தால் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் சிலர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எங்களது போராட்டத்தால் அவசர சிகிச்சை பிரிவு, அவசர அறுவை சிகிச்சை பிரிவு போன்றவற்றிலும், நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். புறநோயாளிகள் பிரிவுக்கு டாக்டர்கள் பணிக்கு செல்ல மாட்டார்கள் என்று தெரிவித்தனர்.


Next Story