பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 12-ந் தேதி நடக்கிறது


பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 12-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 27 Oct 2019 4:30 AM IST (Updated: 26 Oct 2019 9:11 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்ட விளக்க பிரசார கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுமதி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை இணை செயலாளர் சுகன்யா வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் உமாராணி சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தேன்மொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

கவனத்தை ஈர்க்கும் வகையில்...

சட்ட ரீதியான ஓய்வூதியமும் அரசு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி முதல்- அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டமாக அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி பெரம்பலூாரில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலத்தில் சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்த மாதம் 26-ந் தேதி மறியல் பேராட்டத்திலும், டிசம்பர் மாதம் 23-ந் தேதி காலவரையற்ற தொடர் போராட்டத்திலும் சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெரம்பலூர் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story