தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக 6 ஆயிரம் ஆடுகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன


தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக 6 ஆயிரம் ஆடுகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன
x
தினத்தந்தி 27 Oct 2019 4:00 AM IST (Updated: 26 Oct 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக சென்னைக்கு 6 ஆயிரம் ஆடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சென்னை,

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள், பண்டங்கள், புத்தாடைகள் என்ற வரிசையில் அடுத்ததாக அசைவ உணவுகளுக்கும் மிகவும் முக்கிய இடம் உண்டு. தீபாவளியன்று பெரும்பாலான வீடுகளின் உணவு பட்டியலை ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் உணவு வகைகள் அலங்கரிப்பது வழக்கம். பொதுவாக வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவு சாப்பிடுவதை பெரும்பாலானோர் வழக்கமாக வைத்துள்ளனர்.

அசைவ பிரியர்களுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (இன்று) வருகிறது. இதனால் சென்னையில் உள்ள ஆட்டிறைச்சி கூடங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஆடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதேபோல பண்ணைகளில் இருந்து கறிக்கோழிகளும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இறைச்சி கடைகளுக்கு நேற்று முன்தினம் முதலே வரத்தொடங்கிவிட்டன.

சென்னையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி கடைகளில் இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் இடையே நெரிசல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெரிசலை தவிர்ப்பதற்காக சில இறைச்சி கடைகளில் முன்கூட்டியே பணம் பெற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கி வருகிறார்கள். இந்த டோக்கன் வரிசை எண் படி, அவர்களுக்கு இறைச்சி வழங்கப்பட உள்ளது.

ஆட்டு இறைச்சி சாதாரண நாட்களில் ரூ.600 முதல் ரூ.640 வரையிலும், கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி நிலவும் தேவைப்பாட்டின் அடிப்படையில் ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.650 முதல் ரூ.700 வரையிலும், கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரையிலும் அதிகரித்து விற்பனை செய்யப்பட உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சென்னை ஆட்டு இறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.அன்வர் பாஷா குரைஷி கூறியதாவது:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு ஆடுகள் கொண்டுவரப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 10 ஆயிரம் ஆடுகளும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளும் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அமாவாசை தினத்தன்று வருகிறது. பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள்.

இதனால் வியாபாரம் மந்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். விற்பனை பாதிக்கப்படும் என்பதாலும், தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம் என்பதை கருத்தில்கொண்டும் சென்னைக்கு சுமார் 6 ஆயிரம் ஆடுகளே கொண்டுவரப்பட்டுள்ளன. இதேபோல 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் இறைச்சி கோழிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.700-க்கும், கோழி உயிரோடு ரூ.93-க்கும், உரித்தது ரூ.160 முதல் ரூ.180 வரையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story