ஐப்பசி திருவிழா கோலாகலம்: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம்


ஐப்பசி திருவிழா கோலாகலம்: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 27 Oct 2019 3:15 AM IST (Updated: 27 Oct 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி திருவிழாவையொட்டி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை, 

நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

நேற்று முன்தினம் பேட்டை ரோட்டில் உள்ள கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலில் தவம் இருந்த காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுத்தார். மாலையில் சுவாமி-அம்பாள், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் வீதி உலா நடந்தது. பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானபால் ஊட்டும் வைபவம் நடந்தது.

இதை தொடர்ந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மேளதாளம் முழங்க அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் எழுந்தருளினார். பின்னர் சுவாமி சன்னதியில் இருந்து நெல்லையப்பரை, மாப்பிள்ளை அலங்காரத்தில் நெல்லை கோவிந்தர், மேளதாளம் முழங்க ஆயிரங்கால் மண்டபத்துக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு இருந்த பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர்.

இதைத்தொடர்ந்து காலை 4.45 மணிக்கு சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் குலவையிட்டு வழிபட்டனர். காலை 5.15 மணிக்கு நெல்லை கோவிந்தர், அம்பாளை நெல்லையப்பருக்கு தாரை வார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும், மொய் எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டினப்பிரவேசம் வீதி உலா சென்றனர். திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அம்பாள் ஊஞ்சல் விழா நடந்தது. இந்த ஊஞ்சல் விழா நாளை (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது.

Next Story