தோகைமலை அருகே மணல் கடத்திய டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் பலி


தோகைமலை அருகே மணல் கடத்திய டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 27 Oct 2019 4:45 AM IST (Updated: 27 Oct 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசாரை கண்டதும் வேகமாக இயக்கியதால் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

தோகைமலை,

திருச்சி மாவட்டம், அரியாவூர் கிராமத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அரியாறு உள்ளது. இந்த ஆற்றில் மணல் கடத்தல் நடப்பதாக திருச்சி மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர். அப்போது திருச்சி மாவட்டம், அரியாவூரை சேர்ந்த தர்மராஜ் (வயது 42) உள்பட 4 பேர் ஒரு டிராக்டரில் மணல் அள்ளி கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் வருவதை பார்த்ததும் தர்மராஜ் பயந்து அதிகவேகமாக டிராக்டரை எடுத்து கொண்டு கிளம்பினார்.

மற்ற 3 பேரும் கீழே நின்று கொண்டிருந்தனர். ஆனால் டிராக்டர் வேகமாக சென்றதில், கரூர் மாவட்டம் தோகைமலை அருகே சங்ககவுண்டம்பட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிராக்டர் என்ஜினில் சிக்கி தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இதைக்கண்ட திருச்சி மாவட்ட போலீசார் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தர்மராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story