மாவட்டத்தில் 2-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்; நோயாளிகள் கடும் அவதி


மாவட்டத்தில் 2-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்; நோயாளிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 26 Oct 2019 10:45 PM GMT (Updated: 26 Oct 2019 7:43 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

விக்கிரவாண்டி,

இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி அல்லாமல் நோயாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை உருவாக்கி மருத்துவர்களை நியமிக்க வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தாலுகா தலைநகரங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றி வரும் டாக்டர்கள், உதவி மருத்துவ அலுவலர்கள் என 500 பேர் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் மாலை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ், அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாததால் தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று 2-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணிக்கு வராததால் வார்டுகளில் நோயாளிகளை செவிலியர்களே கவனித்து வந்தனர். புறநோயாளிகள் பிரிவுகளிலும் டாக்டர்கள் பணியை புறக்கணித்ததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் ஒன்றிரண்டு டாக்டர்கள் பணியில் இருந்தனர். டாக்டர்களின் போராட்டத்தினால், அரசு மருத்துவமனைகளில் நேற்றும் முக்கியமான சில அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடந்தது. இதனால் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டார்கள்.

Next Story