தேனி அருகே நிரம்பி வழியும் கண்மாய்கள்; விவசாயிகள் மகிழ்ச்சி


தேனி அருகே நிரம்பி வழியும் கண்மாய்கள்; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 Oct 2019 10:45 PM GMT (Updated: 26 Oct 2019 8:01 PM GMT)

தேனி அருகே செங்குளம் மற்றும் கருங்குளம் கண்மாய்கள் நிரம்பி வழிகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி,

தேனி அருகே குன்னூர், வாய்க்கால்பட்டி இடையே செங்குளம் கண்மாய், கருங்குளம் கண்மாய் என இரு கண்மாய்கள் அருகருகே அமைந்துள்ளன. இந்த கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் கோபாலபுரம் தடுப்பணையில் அமைக்கப்பட்டுள்ள மதகு வழியாக தண்ணீர் வருவது வழக்கம்.

சமீபத்தில் மேகமலை, வருசநாடு மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால், இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் நீர்வரத்து ஏற்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் கருங்குளம் கண்மாய் நிரம்பியது.

அந்த கண்மாய் மறுகால் வழியாக தண்ணீர் வெளியேறி செங்குளம் கண்மாய்க்கு சென்றது. தற்போது செங்குளம் கண்மாயும் நிரம்பி மறுகால் பாய்கிறது. இரு கண்மாய்களும் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கண்மாய்கள் நிரம்பி மறுகால் வழியாக வைகை ஆற்றுக்கு உபரிநீர் சென்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின்பு இந்த கண்மாய்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டது. தூர்வாரப்பட்ட சில மாதங்களில் கண்மாய்கள் நிரம்பி உள்ளது. இது விவசாயிகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளது.

Next Story