அணைக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் வாலிபர் பலி; நண்பர் படுகாயம்


அணைக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Oct 2019 4:00 AM IST (Updated: 27 Oct 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

ராமக்காள் அணைக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

சின்னாளபட்டி,

திண்டுக்கல் நேருஜி நகர் சத்யா காலனியை சேர்ந்த ஜெகநாதன் மகன் சதீஷ்குமார் (வயது 19). ‘கேட்டரிங்’ படித்துள்ள இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவர் தனது நண்பர் ஹரிஹரன் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் ஏ.வெள்ளோடு சிறுமலை அடிவாரத்தில் உள்ள ராமக்காள் அணை பகுதிக்கு சென்றார்.

அணையின் மேல்புறம் உள்ள ரோட்டில் மோட்டார்சைக்கிள் சென்றபோது திடீரென நிலை தடுமாறி அணைக்குள் பாய்ந்தது.

இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதையொட்டி அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிஹரன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story