அரசு டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்


அரசு டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 27 Oct 2019 4:00 AM IST (Updated: 27 Oct 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களுக்கும் அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து, காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களையும் உயர்த்த வேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களை படிப்பு காலத்திற்கு பிறகு கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டினை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஈ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகம் என 500-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்தம் நீடித்தது. பொதுமக்கள் நலன்கருதி உயிர்காக்கும் அவசர சிகிச்சை பிரிவும், மகப்பேறு மருத்துவ பிரிவும், காய்ச்சல் பிரிவும் மட்டுமே வழக்கம்போல செயல்பட்டன. ஆனால் புறநோயாளிகள் பிரிவில் அரசு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லாததால், அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் தவிப்புக்குள்ளாகி, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மோசமான நிலைக்கு தள்ளப்படும்

இது குறித்து திருச்சி மாவட்ட அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருளஸ்வரன் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும். சென்னையில் எங்கள் நண்பர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பணி, அவசர ஆபரேஷன் பணிகளை வேலை நிறுத்தத்தை தவிர்த்து மேற்கொண்டு வருகிறோம். அவசரம் இல்லாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. குறிப்பாக புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டோம். ஏற்கனவே 2 முறை அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 6 வார காலத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்தும், எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் மனநிலையில் நாங்கள் இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள்” என்றார்.

Next Story