மழைகாரணமாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் இயக்கம்


மழைகாரணமாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் இயக்கம்
x
தினத்தந்தி 26 Oct 2019 11:15 PM GMT (Updated: 26 Oct 2019 8:35 PM GMT)

மழைகாரணமாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஏறினர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து குன்னூர், மேட்டுப்பாளையத்துக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 9.15 மணி, மதியம் 12.15 மணி, மாலை 5.30 மணிக்கு ஊட்டியில் இருந்து குன்னூருக்கு லவ்டேல், கேத்தி வழியாக இயக்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் இயக்கப்படுகிறது. பசுமையான மலைகளுக்கு நடுவே செங்குத்தாக ஏறும் மலை ரெயிலில் பயணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதற்கிடையே நீலகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. அப்போது தொடர் கனமழை பெய்ததால் ஊட்டி அருகே லவ்டேல்- கேத்தி இடையே ரெயில்வே தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் உடனடியாக மலை ரெயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் கேத்தி ரெயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். மேலும் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே தண்டவாளத்தில் பாறைகள், மரங்கள் விழுந்ததுடன், மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் சேவை பாதிக்கப் பட்டது.

அதனை தொடர்ந்து கனமழை காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மேட்டுப்பாளையம்-குன்னூர்-ஊட்டி, ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஊட்டி-குன்னூர் இடையே ரெயில் இயக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கனமழை பெய்து தண்டவாளம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 22-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி, ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-குன்னூர் இடையே ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. அதனால் ரெயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரெயில் ஊட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று ரெயில் பெட்டிகளில் ஏறினர். மேலும் சுற்றுலாப் பயணிகள் மலை ரெயிலை புகைப்படம் எடுத்ததுடன், தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள். மதியம் 2 மணிக்கு ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது. சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி சென்றார்கள்.

கடந்த கோடை சீசன் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததை அடுத்து, வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் 3 முறை ஊட்டி-கேத்தி இடையே ஜாய் ரைடு என்ற பெயரில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே தற்போது வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருவதாலும், அந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் குறைவாக பயணிப்பதாலும் நேற்று முதல் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story