கோவை அருகே பயங்கரம்: சுடுகாட்டில் வாலிபர் எரித்துக்கொலை


கோவை அருகே பயங்கரம்: சுடுகாட்டில் வாலிபர் எரித்துக்கொலை
x
தினத்தந்தி 27 Oct 2019 4:30 AM IST (Updated: 27 Oct 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே சுடுகாட்டில் வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருமத்தம்பட்டி,

கோவை கணியூர் தட்டாம்புதூர் பகுதியில் சுடுகாடு உள்ளது. இங்குள்ள எரிமேடையில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது. இதனை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது.

இதுகுறித்து கணியூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வி கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அத்துடன் இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் பலர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகன மேடையில் கருகி கிடந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த சுடுகாட்டில் பிணங்களை எரிப்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் நேற்று அங்கு, பிணம் எதையும் எரிக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து மர்ம நபர்கள் ஒரு வாலிபரை கொன்று அவருடைய பிணத்தை இங்கு கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் ராணுவ வீரர்கள் அணியும் டிசைன் போன்று வடிவமைக்கப்பட்டு உள்ள டீசர்ட் அணிந்து இருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அத்துடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட நபரின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை. ஆனால் அவருடைய மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது அவரை மூச்சுத்திணறடித்து கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது.

எரித்துக்கொலை செய்யப்பட்ட வாலிபர் இதே பகுதியை சேர்ந்தவரா? அல்லது வேறு பகுதியை சேர்ந்தவரா? என்பது தெரியாததால், கருமத்தம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாயமான நபர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். மேலும் சுடுகாட்டை தாண்டி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story