மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்


மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 27 Oct 2019 4:30 AM IST (Updated: 27 Oct 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் அரசு டாக்டர் களின் வேலைநிறுத்தம் நேற்று 2-வது நாளாக நடந்தது.

நாமக்கல்,

அனைத்து அரசு டாக்டர்களுக்கும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களை கலந்தாய்வு மூலம் பணி அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் நேற்று முன்தினம் தொடங்கி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இவர்களின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட டாக்டர் கள் கலந்து கொண்டனர்.

இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் காய்ச்சல் பிரிவு ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டன.

காத்திருப்பு போராட்டம்

இதையொட்டி நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதுநிலை பட்டப்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதையொட்டி 4 டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்ததானமும் செய்தனர்.

இதில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லீலாதரன், கண் டாக்டர் ரங்கநாதன், ரகுகுமரன், ரங்கசாமி, மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கூறினர். 

Next Story