பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அமித்ஷா மும்பை வருகிறார் - உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேச திட்டம்


பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அமித்ஷா மும்பை வருகிறார் - உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேச திட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2019 5:15 AM IST (Updated: 28 Oct 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிற 30-ந் தேதி அமித்ஷா மும்பை வருகிறார். அப்போது அவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி கூட்டணி ஆட்சி அமைவதில் உள்ள இழுபறியை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

ஆளும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது. இதில் பா.ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது.

புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் பா. ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு இருந்தபோதிலும், முதல்-மந்திரி பதவியை யார் வகிப்பது? ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை மந்திரி பதவிகள்? என்று முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால், முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இதேபோல் மந்திரி பதவிகளையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதிலும் சிவசேனா உறுதியாக இருக்கிறது. மும்பை ஒர்லி தொகுதியில் வெற்றி பெற்ற தனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்-மந்திரியாக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விரும்புகிறார்.

இதற்கிடையே புதிய அரசு அமைப்பதில் பா. ஜனதா-சிவசேனா கூட்டணியில் இழுபறி நிலை நீடிப்பதால், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் விஜய் வடேடிவார் அளித்த பேட்டியில், பா.ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க சிவசேனா மாற்று வழியை தேர்ந்தெடுக்கவேண்டும் என திடீர் யோசனை தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பாரதீய ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா மும்பை வர உள்ளார்.

அப்போது அவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.சி. கிரிஷ் வயாஸ் கூறியதாவது:-

வரும் 30-ந் தேதி மும்பையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். கூட்டத்தில் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மராட்டிய பா.ஜனதா பொறுப்பாளர் சரோஜ் பாண்டே ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

கூட்டத்திற்குப் பிறகு அமித் ஷா, உத்தவ் தாக்கரேயை சந்திக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உத்தவ் தாக்கரே- அமித்ஷா சந்திப்பு நடைபெறும் பட்சத்தில் கூட்டணி ஆட்சி அமைய சுமூகமான தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது.

Next Story