டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் - அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பரிதவிப்பு
அரசு டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பரிதவித்தனர்.
தேனி,
ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கடந்த 25-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். 4-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் 41 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 114 டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் 4-வது நாளாக 30 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். டாக்டர்கள் வராத அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். குறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாமல் தனியார் மருத்துவமனைகளை நோக்கி சென்றனர்.
போடி, கம்பம், பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறைந்த எண்ணிக்கையில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், பெரும்பாலான டாக்டர்கள் பணிக்கு வந்து இருந்தனர். இருப்பினும் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு முழுமையாக செயல்படவில்லை.
அதேபோல், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 90 சதவீதம் டாக்டர்கள் பணிக்கு வந்து இருந்தனர். இருப்பினும், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு முழுமையாக செயல்படவில்லை. விபத்து போன்ற அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். இதனால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்லும் நிலைமை அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story