இறந்தவர் உடலை எடுத்து செல்வது தொடர்பான பிரச்சினை: பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


இறந்தவர் உடலை எடுத்து செல்வது தொடர்பான பிரச்சினை: பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2019 4:15 AM IST (Updated: 28 Oct 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

இறந்தவர் உடலை எடுத்து செல்வது தொடர்பான பிரச்சினை காரணமாக இடையபட்டியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வடக்குத்தெருவில் மல்லான் கைதட்டு கோவில் உள்ளது. இந்த கோவில் வழியாக ஒரு தரப்பினர், இறந்தவர் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதாகவும், அதற்கு மற்றொரு தரப்பினர், இந்த வழியாக உடலை கொண்டு செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தாசில்தார் மைதிலி தலைமையில் கடந்த வாரம் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடந்தது. இதில் இரு தரப்பினரும் கலந்து கொண்டனர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.

சாலை மறியல்

இந்தநிலையில், இறந்தவரது உடலை எடுத்து செல்ல முடியாத வகையில் ஒரு தரப்பினர் தடுப்பு சுவர் எழுப்பியதாகவும், அதனை மற்றொரு தரப்பினர் அகற்றியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், இறந்தவரது உடலை கோவில் பகுதி வழியாக கொண்டு செல்வதை கண்டித்து நேற்று திடீரென இடையபட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா, வருவாய் ஆய்வாளர் தீபதிலக் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த பிரச்சினை குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறியதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story