பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களை கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4-வது நாளாக நேற்றும் டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகள், திருவண்ணாமலை சுகாதார மாவட்டம், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று வரை டாக்டர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவப்பிரிவு, காய்ச்சல் பிரிவு ஆகியவற்றில் மட்டும் பணியாற்றினர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பயிற்சி டாக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பை சேராத டாக்டர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆரணி அரசு பொது மருத்துவமனையிலும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவு இயங்கவில்லை. தற்போது திடீரென காய்ச்சல் ஏற்பட்டு வருகிற சூழ்நிலையில் டாக்டர்கள் மருத்துவமனைக்கு வராததால் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
அவசர பிரிவில் ஆண், பெண் செவிலியர்கள் மட்டுமே மருந்து, மாத்திரைகள் வழங்கி ஊசி போடுகின்றனர்.
மேலும் மாதந்தோறும் டாக்டரிடம் பரிசோதனை மேற்கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், காச நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கு கூட மாத்திரைகள் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. காய்ச்சல் அதிகமாக உள்ளவர்களை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
அரசு டாக்டர்கள் போராட்டத்தால் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story