தீபாவளியையொட்டி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்


தீபாவளியையொட்டி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 29 Oct 2019 4:00 AM IST (Updated: 29 Oct 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியையொட்டி சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு குடும்பத்துடன் சுற்றி பார்த்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

அன்னவாசல்,

தீபாவளியையொட்டி தொடர் விடுமுறையின் காரணமாக அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் குடும்ப சகிதங்களும், நண்பர்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அதிக அளவில் குவிந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை சுற்றுலா தலத்திலே மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர். வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ் என சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்திருந்தனர்.

பூங்காக்கள், படகுகுளம்

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றை கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சறுக்கல்கள், மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும் செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்து குழந்தைகளுடன் மகிழ்ச்சி பொங்க விளையாடி மகிழ்ந்தனர்.

சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குளத்தில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதுமட்டுமின்றி அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த அன்னவாசல் போலீஸ் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோரிக்கை

சுற்றுலா தலமான சித்தன்னவாசலில் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் சிலர் குடி போதைகளில் உள்ளே நுழைந்து அத்துமீறி சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மற்ற சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைக்கின்றது. எனவே சட்ட விரோத செயல்களில் ஈடு படுவோர்களை கண்காணிக்க நுழைவுவாயில், செக்போஸ்ட், படகுகுளம், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story