மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது.
சேலம்,
சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் நேற்று காலை கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி ஞான ஸ்கந்த குருநாதரிடமிருந்து சக்தி வாய்ந்த வேலை பெற்று மகாலட்சுமி துர்காபரமேஸ்வரி அம்மனிடம் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வருகிற 2-ந் தேதி வரை குருகுல பிரார்த்தனை மண்டபத்தில் சக்தி வாய்ந்த வேலுக்கு சிறப்பு பூஜைகளும், தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
அம்மாபேட்டை செங்குந்தர் பாலசுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று காலையில் கொடியேற்றத்துடன் கந்த சஷ்டிவிழா தொடங்கியது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் நேற்று முன்தினம் தீபாவளியன்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. கோவில் முன்பு ஏற்றப்பட்ட திருக்கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மூலவர் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், உற்சவர் சண்முகநாதர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், இரவில் லட்சார்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நாளான வருகிற 2-ந் தேதி கந்தசஷ்டி விழாவையொட்டி காலை 7 மணிக்கு சஷ்டிபாராயணம் நடக்கிறது. பின்னர் சக்திவேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து சத்ரு சம்ஹார ஹோமம், 36 தடவை சஷ்டி பாராயணம், 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம் லட்சார்ச்சனை பூர்த்தி செய்து மதியம் 12 மணிக்கு தங்க கவசம் சாத்துபடி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் சண்முகநாதர் புறப்பட்டு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு மகா அபிஷேகமும், செந்தூர்வேலன் அலங்காரமும், 108 தங்க மலர்களால் அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடக்கிறது. வருகிற 3-ந்தேதி பகல் 11 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதலும், 12 மணிக்கு திருக்கல்யாணம், உற்சவமூர்த்திக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியதை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும், சிறப்பு பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. பெரமனூர் கந்தசாமி கோவில் உள்பட சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறாது.
இதே போல மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. வருகிற 3-ந் தேதி வரை தினமும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்படுகிறது.
Related Tags :
Next Story