சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு பாதிப்பு - 76 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
மாவட்டத்தில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர சாதாரண காய்ச்சல் பாதிப்பு காரணமாக 76 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்,
மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் காய்ச்சல், குளிர் காய்ச்சல், இருமல், உடல்வலி, தலைபாரம் உள்ளிட்டவை களால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளை தேடிச்சென்ற வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டமாகவே உள்ளது.
இந்த கூட்டத்தில் 10-ல் 7 பேர் காய்ச்சலுக்காக வந்தவர்களாக உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு 7 பேருக்கு இருந்து வந்த நிலையில் இவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். ராமநாதபுரம் கீரைக்காரத்தெருவை சேர்ந்த சக்திஸ்ரீ (வயது 6) என்ற சிறுமிக்கும், பெரியபட்டணம் ஜலாலியா தெருவை சேர்ந்த பாத்திமா (36) என்ற பெண்ணிற்கும் தொடர் காய்ச்சல் இருந்து வந்த நிலையில் அவர்களின் ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர் மருத்துவ கண்காணிப்பின் காரணமாக மேற்கண்ட இருவருக்கும் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உடல்நலம் தேறி வருகின்றனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் கூறியதாவது:- இதற்கு முன்னர் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்ததது கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைக்கு பின்னர் வீடுதிரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் 2 பேர் மட்டுமே டெங்கு பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் ரத்த தட்டணுக்கள் நல்ல நிலையில் உள்ளது. தொடர் காய்ச்சல் இருந்தால் சுயமாக மருந்து மாத்திரைகள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து உரிய பரிசோதனை செய்து கொண்டு அதன் அடிப்படையில் டாக்டரின் பரிந்துரைப்படிதான் மருந்துகள் சாப்பிட வேண்டும். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சையுடன் நிலவேம்பு கசாயம், பப்பாளி பழம் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் விரைவில் சரியாகிவிடும். முடிந்த அளவு அதிகமாக தண்ணீர் குடித்தாலே நீர்ச்சத்து அதிகமாகி காய்ச்சல் சரியாகி விடும். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு அல்லாத சாதாரண காய்ச்சல் காரணமாக 76 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ குழவினர் விரைந்து சென்று நோய் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 33 மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதுதவிர பூச்சியியல் வல்லுனர்கள் குழுவினர் பரமக்குடி, ராமநாதபுரம் சுகாதார மாவட்டங்களில் தலா 2 குழுவினர் அமைக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் கொசுப்புழுக்களை கண்டறிந்து ஒழிப்பதற்காக கொசுப்புழு அழிப்பு பணியாளர்கள் 715 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story