ஆரணி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் விபத்தில் சிக்கிய வாலிபர் பலி - உறவினர்கள் முற்றுகை
ஆரணி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக விபத்தில் சிக்கிய வாலிபருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காததால் அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25), நெசவுத் தொழிலாளி. இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் துந்தரீகம்பட்டில் உள்ள தனது நண்பரை சந்தித்துவிட்டு பின்னர் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது லேசான சாரல் மழை பெய்தது. வளைவில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த பெயர் பலகை கல்வெட்டில் மோதியது. இதில் மணிகண்டனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் ஆகியும் 108 ஆம்புலன்ஸ் வராததால் அங்கிருந்தவர்கள் மோட்டார் சைக்கிளிலேயே மணிகண்டனை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு 5-வது நாளாக நேற்றும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டாக்டர் பாலகணேசன் மட்டும் பணியில் இருந்தார். அவர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். இதனால் உடனடியாக படுகாயமடைந்த மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்க வரவில்லை.
சிறிதுநேரம் கழித்து டாக்டர் வந்து பரிசோதித்தபோது மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
அப்போது அங்கிருந்த உறவினர்களும், நண்பர்களும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தும் டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் மணிகண்டன் இறந்துவிட்டதாக கூறி மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் மகாராணி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உறவினர்களின் ஒப்புதலுடன் ஆரணி அரிமா சங்க மாவட்ட தலைவர் டி.சுரேஷ்பாபுவிடம் மணிகண்டனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
அரசு டாக்டர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். ஒரேயொரு டாக்டர் மட்டும் உள்நோயாளிகளையும், வெளி நோயாளிகளையும் கவனித்து வந்த நிலையிலும் நேற்று ஒரே நாளில் 3 பிரேத பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.
இதனால் மருத்துவமனை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story