தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தஞ்சை வீரர்கள் தங்கம், வெள்ளி வென்று சாதனை


தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தஞ்சை வீரர்கள் தங்கம், வெள்ளி வென்று சாதனை
x
தினத்தந்தி 29 Oct 2019 11:00 PM GMT (Updated: 29 Oct 2019 7:48 PM GMT)

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தஞ்சை வீரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். அவர்களை வைத்திலிங்கம் எம்.பி. பாராட்டினார்.

தஞ்சாவூர்,

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி (கிக் பாக்சிங்) மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து 24 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தஞ்சையில் இருந்து மட்டும் 12 வீரர்கள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் 6 வயது முதல் 28 வயது வரை உடையவர்கள் ஆவர்.

இதில் ஒவ்வொரு போட்டியும் 4 நிமிடம் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். அதன்படி இந்த போட்டியில் பங்கேற்ற தஞ்சையை சேர்ந்த அம்புரோஸ், பிரகதீஸ்வரன், நந்தா, மோனஸ்குமார், அசோக்குமார், யோகேஸ்வரன், ஜனார்த்தனன், நித்தீஷ்குமார், வின்சென்ட், நிஷாந்த், சதீஷ், மாரீஸ்வரன் ஆகிய 12 பேரும் பதக்கம் வென்றனர். இவர்களில் சதீஷ், மாரீஸ்வரன் ஆகிய 2 பேரும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். மற்ற அனைவரும் தங்கப்பதக்கம் பெற்றனர். மேலும் தமிழக அணி அதிக புள்ளி எடுத்ததையடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது.

வைத்திலிங்கம் எம்.பி. பாராட்டு

இவர்களுக்கு தஞ்சையை சேர்ந்த குத்துச்சண்டை பயிற்சியாளர் பிரபாகரன்வீரராஜ் பயிற்சி அளித்தார். இவர் அடுத்த ஆண்டு சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள உலக அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த வீரர்களை வைத்திலிங்கம் எம்.பி. பாராட்டினார்.

Next Story