தஞ்சையில், 5-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்தம் அவசர சிகிச்சையையும் புறக்கணிக்கப்போவதாக பேட்டி


தஞ்சையில், 5-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்தம் அவசர சிகிச்சையையும் புறக்கணிக்கப்போவதாக பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2019 4:30 AM IST (Updated: 30 Oct 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் 5-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் அவசர சிகிச்சையையும் புறக் கணிக்கப்போவதாக கூறி உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு கோரி அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 5-வது நாளாக இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த போராட்டத்துக்கு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட செயலாளர் ராஜேஷ்ராம் தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு டாக்டர்களுக்கும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும்.

அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தஞ்சை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 700-க்கும் அதிகமான டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புறக்கணிப்பு

மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 5 டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், தமிழக அரசு உடனடியாக போராட்டத்துக்கு தீர்வு காணவில்லை என்றால் வருகிற 30-ந்தேதி முதல் அவசர சிகிச்சை பிரிவு, காய்ச்சல் பிரிவு பணிகளையும் புறக் கணிக்கப்போவதாக டாக்டர் ராஜேஷ்ராம் தெரிவித்தார்.


Next Story