உயிரை விட்டாலும் விடுவேனே தவிர: கனகபுரா மருத்துவக்கல்லூரி திட்டத்தை இடம் மாற்ற விட மாட்டேன் - டி.கே.சிவக்குமார் ஆவேசம்


உயிரை விட்டாலும் விடுவேனே தவிர: கனகபுரா மருத்துவக்கல்லூரி திட்டத்தை இடம் மாற்ற விட மாட்டேன் - டி.கே.சிவக்குமார் ஆவேசம்
x

உயிரை விட்டாலும் விடுவேனே தவிர கனகபுரா மருத்துவக்கல்லூரி திட்டத்தை இடம் மாற்ற விட மாட்டேன் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 50 நாட்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்ததை அடுத்து அவர் வெளியே வந்துள்ளார். பெங்களூரு திரும்பிய அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நேரில் சந்தித்து தைரியம் கூறி வருகிறார்கள்.

டி.கே.சிவக்குமார், தனது கையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் கொடியை பிடித்தது தொடர்பாக சித்தராமையா கூறிய கருத்து, காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது தொகுதியான கனகபுராவில் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்க முந்தைய கூட்டணி அரசில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி எடியூரப்பா அதை சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு இடம் மாற்ற திட்டமிட்டுள்ளார். எடியூரப்பாவின் இந்த முயற்சி சரியல்ல. இதை கண்டித்து நான் எந்த வகையான போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன்.

உயிரை விட்டாலும் விடுவேனே தவிர கனகபுரா மருத்துவக்கல்லூரி தொடங்கும் திட்டத்தை இடம் மாற்ற விட மாட்டேன். தகுதி நீக்க எம்.எல்.ஏ. சுதாகர் யார் என்பது எனக்கு தெரியாது. என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடட்டும், கனகபுராவில் மருத்துவக்கல்லூரி தொடங்குவது எனது கனவு திட்டம். அதை எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க மாட்டேன்.

டி.கே.சிவக்குமார் எல்லா பிரச்சினைகளில் இருந்தும் வெளியே வந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன் என்று எடியூரப்பா கூறி இருக்கிறார். அவர் கூறிய கருத்து பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. பாவம், நான் பேசுவதால் அவரது பதவிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது. என்னிடம் எடியூரப்பா எதுவும் பேசவில்லை. ஆனால் பா.ஜனதாவை சேர்ந்த சிலர் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களின் பெயரை இப்போது கூற மாட்டேன். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story