வந்தவாசி பகுதியில் தொடர்மழையால் குடிசை வீடுகள் இடிந்தன


வந்தவாசி பகுதியில் தொடர்மழையால் குடிசை வீடுகள் இடிந்தன
x
தினத்தந்தி 31 Oct 2019 3:30 AM IST (Updated: 30 Oct 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி பகுதியில் பெய்த தொடர்மழையால் குடிசைகள் இடிந்தன. ஆரணி அருகே புளியமரமும் வேருடன் சாய்ந்தது.

வந்தவாசி,

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வந்தவாசி, ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி வந்தவாசியில் 55 மில்லி மீட்டரும், ஆரணியில் 39.4 மில்லி மீட்டரும் மழை பதிவாகியிருந்தது.

விடிய விடிய பெய்த மழையால் வந்தவாசி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள குடிசைகளின் சுவர்கள் ஈரம் பாய்ந்து வலுவிழந்த நிலையில் இருந்தது. இந்த நிலையில் இரும்புலி கிராமத்தை சேர்ந்த தவமணி, மழுவங்கரணை கிராமத்தை சேர்ந்த மாதவன், கூத்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராணி, துரை, வடக்குப்பட்டு கிராமத்தில் டீக்கடை நடத்தும் குணசேகரன் ஆகியோர் வசிக்கும் குடிசை வீடுகளின் சுவர்கள் முற்றிலும் இடிந்து விழுந்தது. மங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராணி, லட்சுமி ஆகியோரது குடிசை வீடுகளும் பகுதி அளவு சேதம் அடைந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த வந்தவாசி தாசில்தார் எஸ்.முரளி, மண்டல துணை தாசில்தார்கள் குமரவேலு, சதீஷ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அப் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு சேத மதிப்புகளை கணக்கிட்டு வருகின்றனர். இந்த மழையால் வந்தவாசி பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல் ஆரணியிலிருந்து எஸ்.யு.வனம் செல்லும் சாலையில் செட்டித்தாங்கல் அருகே சாலையோரம் இருந்த புளியமரம் வேருடன் சாய்ந்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ரவி, நெடுஞ்சாலைத் துறை வருவாய் ஆய்வாளர் இந்துமதி, வருவாய் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரத்தில் சாய்ந்த மரத்தை அகற்றினர்.

Next Story