தாளவாடி அருகே பரிதாபம்: குட்டையில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பலி


தாளவாடி அருகே பரிதாபம்: குட்டையில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 30 Oct 2019 9:45 PM GMT (Updated: 30 Oct 2019 7:05 PM GMT)

தாளவாடி அருகே குட்டையில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பலியானது.

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள திகினாரை கிராமம் ஜோரக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 34). விவசாயி. இவருடைய மனைவி வினிதா (23). இவர்களுடைய மகன் அர்ஷித் (4), மகள்அர்ஷினி (8 மாத குழந்தை). செல்வக்குமார் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

தோட்டத்தை ஒட்டியே வீடும் உள்ளது. வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து மோட்டார் வழியாக தண்ணீரை ஏற்றி தோட்டத்துக்கு பாய்ச்சி வந்தார். இதற்காக வீட்டின் முன்பு ஆழ்துளை கிணறு அருகே, 12 அடி நீளம், 3 அடி ஆழம், 8 அடி அகலத்தில் ஒரு குட்டையும் வெட்டி அதில் தண்ணீரை நிரப்பி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று பகல் 12.45 மணி அளவில் செல்வக்குமார் தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்தார். வினிதா வீட்டுக்குள் வேலையாய் இருக்க, குழந்தை அர்ஷித் வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து வினிதா வாசலில் வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அக்கம் பக்கம் பார்த்தார். அப்போது குட்டை தண்ணீரில் அர்ஷித் மூழ்கியபடி இருந்தான். அதைக்கண்ட வினிதா அலறி அடித்துக்கொண்டு ஓடி குட்டையில் இருந்து மகனை மீட்டார். வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை எப்படியோ குட்டையில் தவறி விழுந்து விட்டது தெரிந்தது. உடனே ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள்.

தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றபின்னர் மேல்சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றார்கள். அங்கு குழந்தையை பரிசோதனைசெய்தடாக்டர்கள் அர்ஷித் இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சுஜித் இறந்தது தமிழ்நாட்டையே சோகமாக்கியது. இந்தநிலையில்4வயது குழந்தை அர்ஷித் வீட்டின் அருகே உள்ள குட்டையில் விழுந்து இறந்தது தாளவாடி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story