நீலகிரி மாவட்டத்தில், நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - கலெக்டர் தகவல்


நீலகிரி மாவட்டத்தில், நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 7:39 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என்று கலெக்டர் கூறினார்.

குன்னூர்,

குன்னூர் அருகே வசம்பள்ளத்தில் குப்பை மேலாண்மை பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

ஊட்டி, குன்னூர் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள அனைத்து பகுதிகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை நீடிப்பதால் மீட்பு பணியில் ஈடுபட அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். இன்று(நேற்று) சின்ன கரும்பாலம் பகுதியில் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள் உடனடியாக உடைத்து, அகற்றப்பட்டன. அங்கு சாலையின் மேற்பகுதியில் இருந்து மேலும் பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். வேறு எங்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஊட்டி-குன்னூர் சாலையில் அருவங்காடு பகுதியில் 5 மரங்கள் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. அந்த மரங்களை வெட்டி அகற்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மரங்களை வெட்டி அகற்றும் பணி தொடங்கவில்லை. மழை ஓய்ந்த பிறகு உடனடியாக மரங்கள் வெட்டி அகற்றப்படும். கனமழை பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story