தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 8:00 PM GMT)

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை,

விவசாயிகளுக்கு உரங்களை தேவையான அளவு இருப்பு வைத்து அதை வினியோகம் செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது:-மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதையொட்டி மாவட்டத்தில் தற்போது 52 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வேளையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைத்து அதை அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்வதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 652 டன் யூரியாவும், தனியார் உரக்கடைகளில் 658 டன் யூரியாவும் கையிருப்பில் உள்ளது. இது தவிர இந்த மாதத்திற்கு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1100 டன் யூரியா உரம் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளது.

இந்த உரத்தை அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைத்து அப்பகுதி விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 2ஆயிரம் டன் அளவு உரம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கும் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உர வினியோகத்தை தினசரி கண்காணிப்பு மேற்கொண்டு அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மண்டல கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், வேளாண்மை உதவி இயக்குனர்(தரக்கட்டுப்பாடு) மோகன்தாஸ்சவுமியன், வேளாண்மை அலுவலர்கள் கருணாநிதி மற்றும் பரமேஸ்வரன், டான்பெட் மண்டல மேலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story