கொட்டித்தீர்த்த அடைமழை: நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்புகிறது


கொட்டித்தீர்த்த அடைமழை: நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்புகிறது
x
தினத்தந்தி 31 Oct 2019 3:15 AM IST (Updated: 31 Oct 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் அடைமழை கொட்டித்தீீர்த்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி வருகிறது.

ராமநாதபுரம்,

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் அடைமழை பெய்து வருகிறது. தீபாவளி அன்று இரவில் தொடங்கிய மழை கடந்த 2 நாட்களாக பகலிலும் இரவிலும் தொடர்ச்சியாக விட்டுவிட்டு அடை மழையாக பெய்து வருகிறது. முதலில் இரவில் மட்டுமே பெய்து வந்த மழை நேற்று பகலிலும் பலத்த காற்றுடன் அடைமழையாக பெய்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் அதிகஅளவில் தண்ணீர் சேர்ந்து வருகிறது. ஒருசில நீர்நிலைகள் அதன் கொள்ளளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் சேர்ந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் வெட்டப்பட்டு காட்சிப்பொருளாக இருந்த பண்ணைக் குட்டைகளில் இந்த தொடர் மழையால் தண்ணீர் சேர்ந்துள்ளது. பல பண்ணைக் குட்டைகள் நிரம்பி பார்க்கவே மகிழ்ச்சி தரும்வகையில் காட்சி அளிக்கிறது.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாலை முதலே தங்களின் விவசாய நிலங்களில் ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்மழையால் மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் பச்சை பசேல் என்று காட்சி அளிக்கிறது.கடந்த 4 ஆண்டுகளாக வறட்சியாக வெடிப்பு ஏற்பட்டு காணப்பட்ட வயல்வெளிகள் எல்லாமல் பயிர்கள் வளர்ந்து காணப்படுவது காண்பவர்களின் மனதை கவரும் வகையில் உள்ளது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- கடலாடி-67, கமுதி-60.30, முதுகுளத்தூர்-40, வாலிநோக்கம்-35, ராமநாதபுரம்-33, திருவாடானை-29.2, பாம்பன்-29.2, ராமேசுவரம்-25.2, தீர்த்தாண்டதானம்-26, மண்டபம்-24.6, தங்கச்சிமடம்-24.5, தொண்டி-20, வட்டாணம்-10, ஆர்.எஸ்.மங்கலம்-16, பரமக்குடி-16.8, பள்ள மோர்குளம்-18.5.

Related Tags :
Next Story