6-வது நாளாக வேலைநிறுத்தம் தஞ்சையில், டாக்டர்கள் தர்ணா போராட்டம்


6-வது நாளாக வேலைநிறுத்தம் தஞ்சையில், டாக்டர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 31 Oct 2019 4:30 AM IST (Updated: 31 Oct 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

6-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் தஞ்சையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களுக்கும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் கடந்த 25-ந் தேதி தொடங்கியது.

நேற்று 6-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம் நீடித்தது. வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டத்துக்கு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்ராம் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி, நிர்வாகிகள் கார்த்திகேயன், அருள்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகம் ஆகியவற்றில் பணியாற்றும் பெரும்பாலான டாக்டர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இதனால் பரிசோதனைகள், சிகிச்சைகள் எதையும் டாக்டர்கள் மேற்கொள்ளாததால் புறநோயாளிகள் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

Next Story