தஞ்சையில், தொடர்ந்து 3-வது நாளாக மழை பள்ளிக்கூடத்தை சுற்றி தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி


தஞ்சையில், தொடர்ந்து 3-வது நாளாக மழை பள்ளிக்கூடத்தை சுற்றி தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 8:14 PM GMT)

தஞ்சையில் தொடர்ந்து 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. தஞ்சையில் உள்ள பள்ளிக்கூடத்தை சுற்றி தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்குப்பருவமழை தொடக்கத்தில் ஓரிரு நாட்கள் தொடர்ந்து பெய்தது. அதன் பின்னர் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 28-ந்தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாகவும் மழை பெய்தது. நேற்று காலை மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மதியம் 3.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

கொள்ளிடத்தில் அதிக தண்ணீர் திறப்பு

இதே போல் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அம்மாப்பேட்டை, மதுக்கூர், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவதால் நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தற்போது தண்ணீர் தேவைப்படாததால் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறுகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு கொள்ளிடத்தில் அதிக அளவு திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 7ஆயிரத்து 170 கன அடி திறக்கப்பட்டது. நேற்று இது 8 ஆயிரத்து 215 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

பள்ளிக்கூடத்தை சுற்றி தண்ணீர்

தஞ்சை 13-வது வார்டு டவுன்கரம்பையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றிலும் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த பகுதியில் சமுத்திரம் ஏரி வடிகால் உள்ளது. இந்த வடிகால் வழியாக தண்ணீர் வடவாறுக்கு செல்லும்.

மேலும் பாதாள சாக்கடை கழிவுநீர் சமுத்திரம் ஏரியில் சுத்திகரிக்கப்பட்டு இந்த வடிகால் வழியாகத்தான் செல்கிறது. இந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் டவுன் கரம்பை பகுதியில் தெருக்களிலும், பள்ளியை சுற்றிலும் தேங்கி காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

பூதலூர்

பூதலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பூதலூர் நான்சிநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. அதேபோல வடக்கு அம்பலகாரத்தெரு, சந்துதெரு, காமாட்சி அம்மன் கோவில் தெருக்களிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அதேபோல திருவையாறு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேல உத்தமநல்லூர் கீழத்தெருவை சேர்ந்த நித்யானந்தம் மனைவி கவிதா, ரெங்கசாமி மகன் பிரகாஷ் ஆகிய 2 பேரின் வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தது.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருக்காட்டுப்பள்ளி 82, கல்லணை 58, திருவையாறு 52, அய்யம்பேட்டை 48, நெய்வாசல் தென்பாதி 44, அணைக்கரை 44, வெட்டிக் காடு 36, மஞ்சளாறு 35, பாபநாசம் 33, திருவிடைமருதூர் 31, கும்பகோணம் 28, பூதலூர் 24, அதிராம்பட்டினம் 23, வல்லம் 22, குருங்குளம் 22, ஈச்சன்விடுதி 15, தஞ்சை 14, பட்டுக்கோட்டை 13, பேராவூரணி 12, மதுக்கூர் 11, ஒரத்தநாடு 7.


Next Story