திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சாவு மாஜிஸ்திரேட்டு விசாரணை


திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சாவு மாஜிஸ்திரேட்டு விசாரணை
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 8:33 PM GMT)

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி இறந்தார். இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டைத்தெருவை சேர்ந்தவர் சங்கர் என்ற சீனி (வயது 40). இவர், கடந்த 2014-ம் ஆண்டு இலுப்பூர் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர். கடந்த 23.2.2016 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார்.

கடந்த 23-ந் தேதி திருச்சி மத்திய சிறையில் சீனிக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால், திருச்சி சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு சிறைத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் 25-ந் தேதி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் சாவு

அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கடந்த 25-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலைக்கு செல்லாவிட்டாலும் அவசர சிகிச்சை, காய்ச்சல் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில், ஆயுள்தண்டனை கைதி சீனிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் உயிர் இழந்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதற்கு சிறைத்துறை தரப்பில் மறுக்கப்பட்டது. முறையான சிகிச்சை கைதிகளுக்கான சிறப்பு வார்டில் வைத்து அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து திருச்சி மத்திய சிறை ஜெயிலர் மில்டன், திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆயுள்தண்டனை கைதி சாவு குறித்து, திருச்சி 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு திருநாவுக்கரசு விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story