கோவை மாவட்டத்தில் பயனற்ற நிலையில் கிடந்த 2,557 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன - கலெக்டர் நடவடிக்கை
கோவை மாவட்டத்தில் பயனற்ற நிலையில் கிடந்த 2 ஆயிரத்து 557 ஆழ்துளை கிணறுகள், கலெக்டர் உத்தரவின் பேரில் மூடப்பட்டன.
கோவை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அரசு துறைகள் மூலமாகவும், தனிநபர் விவசாய நிலங்கள் மற்றும் தனிநபர் வணிக நோக்கத்திற்காகவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் அதனை பாதுகாப்பான முறையில் மூடி வைக்கவும், ஏற்கனவே அரசு அறிவிக்கை வெளியிட்டு உள்ளது. இருந்தபோதிலும் ஆங்காங்கே சில இடங்களில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் உரிய பாதுகாப்பான முறையில் மூடப்படாமல் உள்ளதால் எதிர்பாராத சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது.
எனவே இதனை தடுக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், சிமெண்ட் சிலாப் போட்டு மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி தனி அதிகாரியும், நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையாளரும், பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊரக பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடனும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் உரிய பாதுகாப்பான முறையில் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களும் தங்களது இடங்களில் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடி பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்கும்படியும், ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள் இருப்பின் அதுபற்றி 18005996000 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கலெக்டர் உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் பயன்பாடற்ற நிலையில் கிடந்த ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. அனைத்து ஊராட்சிகளிலும் அரசு சார்பில் ஆயிரத்து 466 ஆழ்துளை கிணறுகளும், தனியார் சார்பில் ஆயிரத்து 300-ம் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 766 ஆழ்துளை கிணறுகள் பயனற்றநிலையில் இருந்தன. அதில் நேற்று வரை 2 ஆயிரத்து 557 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு விட்டன. மீதி 209 ஆழ்துளை கிணறுகள் இரண்டொரு நாளில் மூடப்படும் என்றும், இதே போல பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி முகமை சார்பில் போடப்பட்டு பயன்பாடு இல்லாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story