கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் குழந்தை சுஜித் இறப்பு தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு


கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் குழந்தை சுஜித் இறப்பு தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 8:43 PM GMT)

குழந்தை சுஜித் இறப்பு தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். கட்டிட தொழிலாளியான இவரது இளைய மகன் சுஜித் வில்சன் (வயது 2). கடந்த வெள்ளிக்கிழமை வீட்டின் அருகே பயன்பாடற்ற நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுஜித் தவறி விழுந்தான்.

இதையடுத்து சுஜித்தை உயிருடன் மீட்க தீயணைப்பு துறையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், குழந்தைகளை மீட்பதில் அனுபவம் பெற்ற தனி நபர்கள் பல கட்ட முயற்சி எடுத்தனர். பல்வேறு தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டன. அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் 4 நாட்களாக அங்கேயே முகாமிட்டு இருந்தனர்.

பிணமாக மீட்பு

சுமார் 80 மணி நேர போராட்டத்திற்கு பின்னரும் குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. நேற்று முன்தினம் அதிகாலை சுஜித்தின் பிணத்தைதான் மீட்க முடிந்தது. இதையடுத்து சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சுஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்து பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.

போலீசார் வழக்குப்பதிவு

இந்நிலையில் சுஜித் இறப்பு சம்பவம் தொடர்பாக தற்போது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வேங்கை குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி உசேன் பீவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 29-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு சட்டப்பிரிவு 174-ன் கீழ் (இயற்கைக்கு மாறான மரணம்) இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முதல் தகவல் அறிக்கையில், சுஜித் வில்சனின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் 5 ஆண்டுகளுக்கு முன் வீட்டருகே குடிநீர் உபயோகத்திற்காக அமைத்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனதால் அதன் மேல் பகுதியில் சாக்கு பையை சுற்றி வைத்து, அதன் அருகில் சோளம் பயிரிட்டு இருந்தார். தொடர்ந்து பெய்த மழையினால் சாக்குப்பை சேதம் அடைந்து திறந்திருந்த நிலையில் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டதாகவும், மீட்பு நடவடிக்கைகள் பலன் அளிக்காமல் 29-ந்தேதி அதிகாலை சுஜித்தின் பிணம் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.


Next Story