போலீஸ் வாகன சோதனையில் ரூ.2½ லட்சம் தங்க பிஸ்கெட் சிக்கியது


போலீஸ் வாகன சோதனையில் ரூ.2½ லட்சம் தங்க பிஸ்கெட் சிக்கியது
x
தினத்தந்தி 30 Oct 2019 10:30 PM GMT (Updated: 30 Oct 2019 9:14 PM GMT)

போலீஸ் வாகன சோதனையில் மோட்டார்சைக்கிளில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கெட் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர்,

சென்னை பாரிமுனையில் நேற்று முன்தினம் இரவு வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தும்படி போலீசார் சைகை காண்பித்தனர்.

ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர், நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிளை விரட்டிச்சென்று அந்த நபரை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

தங்க பிஸ்கெட் கடத்தல்

அதில் அவர், ராயபுரம் பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் (வயது 52) என்பதும், அவரிடம் நடத்திய சோதனையில் சுமார் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 60 கிராம் தங்க பிஸ்கெட் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டு 30 பாக்கெட்டுகள் இருந்தன.

பாரிமுனை சேர்ந்த அபூபக்கர் என்பவருக்காக அவற்றை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார். அவரிடம் தங்கம், வெளிநாடு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக முருகேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story