கொத்தமங்கலத்தில் ஆபத்தான நிலையில் 10 ஆழ்துளை கிணறுகள் இளைஞர்களே பாதுகாப்பாக மூட முடிவு


கொத்தமங்கலத்தில் ஆபத்தான நிலையில் 10 ஆழ்துளை கிணறுகள் இளைஞர்களே பாதுகாப்பாக மூட முடிவு
x
தினத்தந்தி 30 Oct 2019 10:45 PM GMT (Updated: 30 Oct 2019 9:37 PM GMT)

கொத்தமங்கலத்தில் பயன்பாடு இன்றி ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை கணக்கெடுத்த இளைஞர் மன்றத்தினர் அந்த ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேமிக்கவும், பாதுகாப்பாக மூடவும் முடிவு செய்துள்ளனர்.

கீரமங்கலம்,

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனைகள் செய்தனர். ஆனால் சடலமாக மீட்கப்பட்டான். இந்த தகவலையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பாற்ற பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேமிக்க பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பல இடங்களில் தற்காலிகமாக மூடப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பாற்ற ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை இளைஞர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் கணக்கெடுத்தனர். அதில் மொத்தம் 10 ஆழ்துளை கிணறுகள் பயன்பாடற்று பாதுகாப்பு இல்லாமல் உள்ளதை கண்டறிந்தனர். அதில் குடிதண்ணீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளே அதிகமாக உள்ளது.

பாதுகாப்பாக மூட

ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுத்த இளைஞர் மன்றத்தினர் அந்த ஆழ்துளை கிணறுகளில் மழை நீர் சேமிப்பிற்காக மாற்றப்படுவதுடன் மேலும் மழை நீர் சேமிக்க முடியாத ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடுவது என்றும் முடிவு செய்துள்ளனர். மேலும் கிராமம் முழுவதும் குழந்தைகளை ஆழ்துளை கிணறுகள், பழைய கிணறுகள் அருகில் அனுப்ப வேண்டாம் என்று விழிப்புணர்வு பிரசாரம் ஆட்டோ மூலமாக செய்தனர்.

இதுகுறித்து இளைஞர் மன்றத்தினர் கூறுகையில், சிறுவன் சுஜித் பலியான சம்பவம் எங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக அனைத்து பழைய ஆழ்துளை கிணறுகளையும் மழைநீர் சேமிப்பிற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.


Next Story