அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் 2-வது நாளாக பலத்த மழை


அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் 2-வது நாளாக பலத்த மழை
x
தினத்தந்தி 30 Oct 2019 10:30 PM GMT (Updated: 30 Oct 2019 9:40 PM GMT)

மலைக்குடிப்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், இலுப்பூர், வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர், சித்தன்னவாசல், மெய்வழிச்சாலை, கீழக் குறிச்சி, நார்த்தாமலை, குடுமியான்மலை, பரம்பூர், மதியநல்லூர், பெருஞ்சுனை, பணம்பட்டி, சொக்கநாதன்பட்டி மாங்குடி, சத்திரம், செங்கப்பட்டி, வயலோகம், மலைக்குடிப்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இந்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. மேலும் அன்னவாசல் பகுதிகளில் அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, உருவம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர். மரிங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அன்னவாசல் விவசாய அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. அன்னவாசல் மருத்துவமனை அருகே உள்ள சாலை முழுவதும் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கியதால் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்பட்டது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. டி.வி.எஸ். கார்னர் பகுதியில் சில வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். இதேபோல் நகராட்சி பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து நகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணியிலும் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த மழையால் குளிர்ந்த காட்சி வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில், ஆதனக்கோட்டை 13, பெருங்களூர் 15, புதுக்கோட்டை 52.20, ஆலங்குடி 23, கந்தர்வகோட்டை 21, திருமயம் 40.50, அரிமளம் 37.60, அறந்தாங்கி 18.60, ஆவுடையார்கோவில் 14.80, இலுப்பூர் 31, குடிமியான்மழை 15, அன்னவாசல் 13, உடையாளிப்பட்டி 19, கீரனூர் 28 மில்லி மீட்டர் பதிவானது.

Next Story