சங்கராபரணி ஆற்றில், தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது


சங்கராபரணி ஆற்றில், தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது
x
தினத்தந்தி 30 Oct 2019 10:30 PM GMT (Updated: 2019-10-31T03:10:40+05:30)

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே இருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.

மயிலம்,

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மயிலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ரெட்டணை சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.9 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்படுவதையொட்டி அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள அம்மன்குளத்துமேடு, நாகந்தூர், தளவாளப்பட்டு உட்பட 15 கிராம மக்கள் ரெட்டணை மற்றும் திண்டிவனம் செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் பரிதவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்த போதிலும் செஞ்சி பகுதியில் போதிய மழை பெய்யாததால் மழைமறைவு பிரதேசம் போலவே காட்சி அளித்தது. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் கடந்த ஆண்டு குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதே செஞ்சி பகுதியில் ஓரளவு மழை பெய்தது. இதனால் ஏரி, குளங்களில் ஓரளவு தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் செஞ்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் 7.8 செ.மீ. மழை பெய்தது.

இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு செவலபுரை வராக நதி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. மேலும் நேற்று வரை செஞ்சி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிகிறது. பொன்பத்தி ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த ஏரியில் உள்ள 2 மதகுகளில் ஒரு மதகு அருகே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டது. தற்போது அதே மதகு அருகே ஏரிக்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. மழை பெய்து வரும் நிலையில் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தால், ஏரிக்கரை உடையும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஏரியை பார்வையிட்டார். இது குறித்து அவர் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பொதுப்பணித்துறையினர் விரைந்து சென்று ஏரிக்கரையில் அரிப்பு ஏற்பட்டு இருந்த இடத்தை பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

செஞ்சியை அடுத்த அனந்தபுரம் அருகே உள்ள சித்தரசூரில் பெய்த பலத்த மழையினால் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. அந்த வழியாக குமார் என்ற விவசாயி தனது மாட்டை ஓட்டிச்செல்லும் போது, அறுந்து கிடந்த மின்கம்பியை மாடு மிதித்ததில் மின்சாரம் தாக்கி மாடு உயிரிழந்தது. ஆனால் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேல்மலையனூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் சிறுதலைப்பூண்டி பெரிய ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் ஊர் பொதுமக்கள், திரவுபதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்பு அங்கு இருந்து ஊர்வலமாக சென்று ஏரியில் வழிபாடு செய்து, மங்கல பொருட்களை தண்ணீரில் விட்டு தீபாராதனை காண்பித்தனர்.

இதேபோல் மேல்மலையனூர் அக்னி குளம் மற்றும் முனீஸ்வரன் குளமும் நிரம்பி வழியும் தருவாயில் உள்ளது. மேல்மலையனூர் பெரிய ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மழையால் திண்டிவனம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் முறிந்து விழுந்த மரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தநாடு கிராமத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் கிழக்கு மருதூர் கிராமம் அருகே ஓடை ஒன்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் மழைவெள்ளத்தால் உடைந்து சேதமானது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

Next Story