நகராட்சி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு: பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை


நகராட்சி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு: பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை
x
தினத்தந்தி 31 Oct 2019 4:30 AM IST (Updated: 31 Oct 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை மேற்கொண்டனர்.

கரூர்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்வில்சன் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு மீட்புக்குழு மூலம் பிணமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் தமிழகம் முழு வதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் பயன்பாடற்ற நிலையிலிருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நில உரிமையாளர்கள் முன்வர வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதன்பேரில் கரூர் நகராட்சி பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து, நேற்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன், உதவி பொறியாளர் நக்கீரன் உள்பட அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

12 ஆழ்துளை கிணறுகள்

அப்போது கரூர் டவுன், வெங்கமேடு, இனாம் கரூர், தாந்தோன்றிமலை, சணப் பிரட்டி உள்ளிட்ட பகுதிகளில் பழுது பார்ப்பதற்காக அடிபம்பு எடுத்து செல்லப்பட்டதாலும், மேலும் நீரோட்டம் இல்லாமல் வறண்டு போனதாலும் 12 ஆழ்துளை கிணறுகள் பயன்பாடற்ற நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் மூலம் அவற்றை மூடி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். தனியார் நிலங்களில் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் பாதுகாப்பு கருதி அதனை மூடிட வேண்டும் என பொதுமக்களுக்கு நகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

மூடும் பணி

இதே போல், கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தொடர்ந்து மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அதிகாரி புவனேஸ்வரி ஆய்வு மேற்கொண்டு மூடப்படாத ஆழ்துளை கிணற்றை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார். புலியூர் வெங்கடாபுரத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றினை பேரூராட்சி பணியாளர்கள் மூடி நடவடிக்கை மேற்கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி துரிதமாக நடந்து வருகிறது.


Next Story