மாவட்ட செய்திகள்

குமரியில் கனமழை கொட்டி தீர்த்தது; திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு வீடுகள் இடிந்தன- வாழைகள் சேதம் + "||" + Heavy rains pour in Kumari; Flooding houses collapsed in open waterway - damage to bananas

குமரியில் கனமழை கொட்டி தீர்த்தது; திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு வீடுகள் இடிந்தன- வாழைகள் சேதம்

குமரியில் கனமழை கொட்டி தீர்த்தது; திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு வீடுகள் இடிந்தன- வாழைகள் சேதம்
குமரியில் கனமழை கொட்டி தீர்த்ததால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்ததுடன், ஏராளமான வாழைகள் சேதம் அடைந்தன.
கன்னியாகுமரி,

குமரி கடல் அருகே லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் பெய்தது.


நேற்று காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நாகர்கோவிலில் அசம்புசாலை உள்பட பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதே போல் மாவட்டம் முழுவதும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,141 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு 798 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 136 கனஅடியும், பொய்கை அணைக்கு 55 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 26 கனஅடியும், முக்கடல் அணைக்கு 4 கனஅடியும் தண்ணீர் வருகிறது. அதே சமயத்தில் பெருஞ்சாணி அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது. அதோடு பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதே போல் சிற்றார் 1 மற்றும் சிற்றார் 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டு இருப்பதால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அழகப்பபுரம் பகுதியில் உள்ள செங்குளம் நிரம்பி தண்ணீர் சாலையில் ஓடியது. இதே போல் மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் நிரம்பி உள்ளன.பழையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

வீடுகள் இடிந்தன

கன்னியாகுமரியில் நேற்று ராட்சத அலைகள் எழும்பி வந்து பாறைகளில் மோதி சென்றன. கன்னியாகுமரிக்கு வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் குறைவாகவே வந்து இருந்தனர். அவர்களும் மழையின் காரணமாக அறைகளிலேயே முடங்கினார்கள்.

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் நரிகுளம் பகுதியை சேர்ந்த லட்சுமணசிங் என்பவரது வீடு மழையினால் இடிந்தது. மேலும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள சந்திரன் என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. இதே போல் சீதப்பால் பகுதியில் தேவசகாயம் மற்றும் ராஜன் என்பவர்களின் வீடுகளும் இடிந்து விழுந்தன.

அஞ்சுகிராமம் அருகே வாரியூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மழை நீர் சூழ்ந்தது. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறைக்கு செல்வதற்கும், கழிவறைக்கு செல்வதற்கும் மிகவும் அவதிப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், ஆஸ்டின் எம்.எல்.ஏ. அங்கு விரைந்து வந்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

மின் கம்பங்கள் சாய்ந்தன

இரணியல் அருகே உள்ள பள்ளிச்சன்விளையில் இருந்து நல்லிக்குளம் செல்லும் சாலையோரம் ஏராளமான தென்னை மரங்கள் நிற்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் சாலையோரத்தில் நின்ற ஒரு தென்னை மரம் வேரோடு சாய்ந்தது. இதில் 3 மின்கம்பங்களும் சாய்ந்தன. மேலும், மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் மின் வினியோகம் தடை பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுபற்றி மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மின்கம்பங்கள் சாலையில் விழுந்ததால், விவசாய நிலங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாமலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மூடைகளை வாகனங்களில் எடுத்து வர முடியாமலும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சாய்ந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழைகள் சேதம்

பூதப்பாண்டி பகுதியில் நள்ளிரவில் சூறைகாற்றுடன் பெய்த பலத்த மழையால் அரசன்குழி பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் நின்ற 1400 வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. அதோடு தோவாளை தாலுகாவில் அனந்தபுரம், காட்டுப்புதூர் ஆகிய இடங்களிலும் சுமார் 300 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டு மகசூலுக்கு தயார் நிலையில் நின்ற வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.

இதே போல் கன்னியாகுமரி கொட்டாரம் பெரியவிளை, பஞ்சலிங்கபுரம், நரிக்குளம் போன்ற பகுதிகளில் நின்ற ஏராளமான வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழைகளை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், தோவாளை தாசில்தார் ராஜேஷ்வரி, பூதப்பாண்டி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மழை அளவு

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்-35.8, பூதப்பாண்டி-30.2, களியல்-11.8, கன்னிமார்-31.2, கொட்டாரம்-61, குழித்துறை-20, மயிலாடி-99.4, புத்தன்அணை-11, சுருளோடு-23.6, குளச்சல்-14, இரணியல்-10.6, ஆரல்வாய்மொழி-42, கோழிப்போர்விளை-22, அடையாமடை-13, குருந்தன்கோடு-20, முள்ளங்கினாவிளை-23 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

இதே போல அணை பகுதிகளில் பேச்சிப்பாறை-19.6, பெருஞ்சாணி-12.2, சிற்றார் 1-20.6, சிற்றார் 2-13, மாம்பழத்துறையாறு-25, பொய்கை-42, முக்கடல்-22 என மழை பதிவாகி இருந்தது.

உப்பள தொழில் பாதிப்பு

கனமழையின் காரணமாக தென்தாமரைகுளம் பகுதியில் உள்ள உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் 200 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வந்த உப்பள தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் முகிலன்குடியிருப்பு கோவில்விளை, கீழ மணக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த தும்பு தொழிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே வேலையில்லாமல் அவதிப்படும் உப்பள தொழிலாளர்கள், கதம்பை மில் தொழிலாளர்கள், கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் ஆகியோர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அரசு உப்பளம், தும்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மழை காலங்களில் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை கனமழை கொட்டியது.
2. சென்னையில் சில இடங்களில் கனமழை
சென்னையில் சில இடங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
3. குமரியில் தொடர் மழை: பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. வெள்ளப்பெருக்கால் 2-வது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. சென்னையில் பரவலாக கனமழை; வாட்ஸ்அப் எண் அறிவிப்பு
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
5. சென்னை, கடலூர், நாமக்கல் பகுதிகளில் கனமழை
சென்னை, கடலூர் மற்றும் நாமக்கல்லின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்துள்ளது.