காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 10:45 PM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் போலீசார் காவிரி கரையில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் எதிரொலியாக கடந்த 23-ந்தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது.

அணை நிரம்பியபோதும் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாசனத்துக்கு தண்ணீர் தேவை மிகவும் குறைந்துள்ளது. இருப்பினும் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த தண்ணீர் முழுமையாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Next Story