கள்ள நோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை - ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு


கள்ள நோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை - ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 11:42 PM GMT)

கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் ஊப்ளியை சேர்ந்த ஈரப்பா என்பவரது மகன் ஸ்ரீதர் (வயது 23). இவரது நண்பர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பொம்மண்டபள்ளியை சேர்ந்த சொக்கப்பன் என்பவரது மகன் ரவி(27). இவர்கள் இருவரும் பொம்மண்டபள்ளியில் ரகசிய இடத்தில் கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து ரூ.100, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை கள்ள நோட்டுக்களாக தயாரித்து அவற்றை கடைகள், சந்தைகளில் புழக்கத்தில் விட்டனர்.

இதுகுறித்து, தேன்கனிக்கோட்டை அருகே அன்னியாளம் கிராமத்திலிருந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 9-05-2015 அன்று தேன்கனிக்கோட்டை போலீசார் ரவி மற்றும் ஸ்ரீதரை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோனிகா குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீதர் மற்றும் ரவி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எம்.ஜீவானந்தம் ஆஜர் ஆகி வாதாடினார்.


Next Story