தஞ்சை பெரியகோவில், நகரை சுற்றியுள்ள அகழி, ரூ.180 கோடியில் புதுப்பொலிவு பெறுகிறது


தஞ்சை பெரியகோவில், நகரை சுற்றியுள்ள அகழி, ரூ.180 கோடியில் புதுப்பொலிவு பெறுகிறது
x
தினத்தந்தி 31 Oct 2019 11:15 PM GMT (Updated: 31 Oct 2019 4:49 PM GMT)

தஞ்சை பெரியகோவில், நகரை சுற்றியுள்ள அகழி ரூ.180 கோடியில் புதுப்பொலிவு பெறுகிறது. மேலும் கோட்டைச்சுவர் மற்றும் படித்துறைகளும் சீரமைக்கப்படுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவை அமைந்து உள்ளன. தஞ்சை நகராட்சி கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு மாநகராட்சிகளை அறிவித்து பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கியது. அதில் தஞ்சை மாநகராட்சியும் ‘ஸ்மார்ட் சிட்டி’யாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி ரூ.904 கோடி மதிப்பீட்டில் 12 விதமான பல்வேறு பணிகள் தஞ்சை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குடிநீர் பணிகள், சாலை வசதிகள், பூங்கா பராமரிப்பு, பஸ் நிலையங்கள் புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக தஞ்சை பெரியகோவில் பகுதியில் உள்ள அகழியை சுத்தப்படுத்தி பணிகள் மேற்கொள்ள ரூ.180 கோடியில் திட்ட மதிப்பீட்டை மாநகராட்சி தயார் செய்து அனுப்பி உள்ளது.

அகழி புதுப்பிக்கப்படுகிறது

தஞ்சை பெரியகோவில் பின்பகுதியில் கல்லணைக்கால்வாய் கரையில் இருந்து அகழி தொடங்கி பெரியகோவிலின் வடக்கு பகுதி மற்றும் பெரியகோவிலின் முன்புறம் மற்றும் கோட்டைச்சுவரையொட்டி வந்து திருவையாறு செல்லும் சாலை வழியாக திருவையாறு பஸ்கள் நிற்கும் பின்பகுதி வரை செல்கிறது.

இந்த அகழியின் தூரம் 4.25 கிலோ மீட்டர் ஆகும். இந்த அகழிக்கு கல்லணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் விடப்படுகிறது. கல்லணைக்கால்வாய் தண்ணீர் மற்றும் வடகிழக்குப்பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீர் என 6 மாத காலத்துக்கு அகழியில் தண்ணீர் நிறைந்து காணப்படும்.

இந்த அகழியை சுத்தப்படுத்தி இருபுறமும் நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. அதில் புல்தரைகள், படித்துறைகள் சீரமைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் நவீன விளக்குகளும் பொருத்தப்படுகின்றன.

கலாசார மையங்கள்

மேலும் இந்த நடைபாதையின் ஓரத்தில் கைவினைகலைஞர்களின் தயாரிப்புகள், கலாசார மையங்கள், பெரியகோவில் பற்றிய விளக்க கூடம் போன்றவையும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடைந்து அகழி சுத்தப்படுத்தப்பட்டு நீர் நிரப்பிய பின்னர் அதில் படகு சவாரி விடப்படுகிறது.

பெரியகோவிலை சுற்றி 100 மீட்டர் தொலைவுக்கு எந்தவித கட்டிடங்களும் மேற்கொள்ளக்கூடாது என தொல்லியல் துறை விதிமுறை உள்ளது. இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அகழி மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இது குறித்து தொல்லியல் துறை அனுமதிக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

கோட்டைச்சுவர்கள்

பெரியகோவில் கோட்டை சுவர் மற்றும் முன்பகுதியில் உள்ள பணிகள் அனைத்தும் தொல்லியல் துறை விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் பெரியகோவிலை சுற்றி உள்ள பெரிய கோட்டைச்சுவர் 35 அடி உயரமும், 15 அடி அகலமும் கொண்டது. இந்த கோட்டைச்சுவர் பல இடங்களில் சிதிலமடைந்தும், உடைந்தும் காணப்படுகின்றன.

இதேபோல் இந்த கோட்டைச்சுவருக்கு உட்பகுதியில் சின்ன கோட்டைச்சுவரும் உள்ளது. இந்த கோட்டைச்சுவர் கி.பி.1003-ம் ஆண்டு முதல் கி.பி.1006-ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டது.

இந்த 2 கோட்டைச்சுவர்களும் பழமை மாறாமல் அப்படியே புதுப்பிக்கப்படுகின்றன. முதற்கட்டமாக அகழியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்கள் மற்றும் இதர பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பெரியகோவில் பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story