7-வது நாள் வேலை நிறுத்தத்தையொட்டி டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம் திருவாரூரில் நடந்தது


7-வது நாள் வேலை நிறுத்தத்தையொட்டி டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம் திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 2019-10-31T22:44:36+05:30)

திருவாரூரில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று 7-வது நாள் வேலை நிறுத்தத்தையொட்டி டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

கிராமப்புறங்களில் சேவை செய்த அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். பட்ட மேற்படிப்பு டாக்டர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 25-ந் தேதி தொடங்கினர்.

நேற்று 7-வது நாளாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பின்னர் டாக்டர்கள் கூறுகையில், 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல், பணிக்கு திரும்பாவிட்டால் டாக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருப்பது வேதனை அளிக்கிறது.

டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.

Next Story