மூடிகெரே தாலுகாவிற்கு உட்பட்ட கும்பாரலு கிராமத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் - கிராம மக்கள் பீதி


மூடிகெரே தாலுகாவிற்கு உட்பட்ட கும்பாரலு கிராமத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் -  கிராம மக்கள் பீதி
x
தினத்தந்தி 31 Oct 2019 10:15 PM GMT (Updated: 31 Oct 2019 5:19 PM GMT)

மூடிகெரே தாலுகாவிற்கு உட்பட்ட கும்பாரலு கிராமத்திற்குள் புகுந்து ஒற்றை காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவிற்கு உட்பட்டது கும்பாரலு கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் இந்த கிராமத்திற்குள் காட்டுயானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டுயானை வெளியேறியது. அந்த காட்டுயானை கும்பாரலு கிராமம் மற்றும் அதன் அருகே உள்ள பைராப்புரா கிராமம் ஆகிய கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.

நேற்று முன்தினம் அந்த காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர். அப்போது அந்த காட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் சேத்தன் படுகாயம் அடைந்தார். தற்போது அவர் சிக்கமகளூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அந்த காட்டுயானை கும்பாரலு மற்றும் பைராப்புரா கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் அந்த காட்டுயானை கும்பாரலு கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் நடமாடுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த ஒற்றை காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story